Thursday 22 March 2012

ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் கர்ப்பகால சாத்வீக உணவு முறை!

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் உண்ணும் உணவானது தாய் – சேய் நலத்தின் ஆதாரமாக திகழ்கிறது. எனவே தான் கர்ப்ப காலத்தில் அவர்கள் மீது சிறப்பாக கவனம் செலுத்துகின்றனர் பெரியோர்கள். கர்ப்பகால உணவு முறை பற்றி கர்ப்பிணி பரிச்சார்யா என்னும் ஆயுர்வேத நூலில் கூறப்பட்டுள்ளது கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் உணவு முறையை மூன்று விதமாக பிரித்துள்ளது. சாத்வீகம், ராஜசம், தாமசம் என மூன்று விதமாக பிரித்துள்ளது. அவ்வப்போது உடனடியாக சமைத்து உண்ணக்கூடிய ஊட்டச்சத்துள்ள உணவு சாத்வீகம். அதிக சக்தியை தரக்கூடியது ராஜாச உணவு. அதே சமயம் ஹெவியான மற்றும் மந்த நிலையை தரக்கூடியது தாமச உணவாகும். கர்ப்பிணிகள் அனைவரும் சாத்வீக உணவு முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
உயிரோட்ட முள்ள பழங்கள்
சாத்வீகமான உணவுமுறையில் பச்சை காய்கறி, பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பீச், மாம்பழம், தேங்காய் போன்ற உணவுகளை முதல் மூன்று மாதத்தில் உண்ணலாம். பாஸ்மதி அரிசியில் சமைத்த உணவுகளை உண்பது நலம் தரும் எனவும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. உருளைக் கிழங்கு, மீன், கோழிக்கறி போன்றவையும் சமைத்து உட்கொள்ளலாம்.
கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந் துரைக்கப்படுகிறது. இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது.
மென்மையான உணவு வகை
முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.இக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
பருப்பு, நெய் உணவு
மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவ மூலிகை
தினமும் காலையில் பழச்சாறு அருந்த வேண்டும். அதன் பின்னர் பாதம், காய்ச்சி குளிரவைக்கப் பட்ட பால் வேக வைத்த முட்டை உட்கொள்ளவேண்டும். வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடவேண்டும். மதிய நேரத்தில் காரட் சாலட், தக்காளி, போன்றவை எடுத்துக் கொள்ளலாம். அரிசி சாதம், காய்கறி, அல்லது மாமிசம் உட்கொள்ளலாம் எனவும் பரிந்துரைக்கிறது.
மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த சத்தாகும். கொழுப்புச்சத்து, உப்புச்சத்து மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எளிதான பிரசவம்
ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

No comments:

Post a Comment