Thursday 22 March 2012

40 வயதிலும் உடல் ஆரோக்கியமாக இருக்க…….

இளமையில் ஓடி ஆடி திரிந்த மனிதர்கள் நடுத்தர வயதான நாற்பதை தொட்டதும் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. உடல்பருமன், ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயகோளாறுகள் என எட்டிப்பார்ப்பது இந்த வயதில்தான். இருபது வயதுகளில் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறீர்களோ அதுதான் நாற்பதுகளில் நமக்கு பலன் கொடுக்கும். எனவே 40 வயதிலும் உடல் ஆரோக்கியமாக இருக்க உணவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள்.
ஊட்டச்சத்துணவு
கல்லை சாப்பிட்டாலும் கரையும் வயதுதான் இருபது. அதற்காக கண்டதையும் தின்றால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஆகிவிடும். சிக்கன், மட்டன் முட்டை என்பது உடலுக்கு தேவைதான் அதற்காக தினசரி
எந்த நேரமானாலும், மாமிச உணவுகளை உட்கொள்வது ஆபத்தானது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
நல்ல கொழுப்புகளை உடலுக்குத் தரக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.
வைட்டமின்கள் தாது உப்புகள்
நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள், உடல் விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.
ஆறுமணி நேர உடற்பயிற்சி
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் நடை பயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். தினசரி உடற் பயிற்சி கூடத்திற்கு சென்று கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும். மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும். இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
எனவே இளமையிலேயே உடலை ஆரோக்கியமாக பேணுவது நடுத்தர வயதிலும் முதுமையில் நன்மை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment